தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் : எடியூரப்பா பரபரப்பு பேட்டி


தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் : எடியூரப்பா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 21 May 2019 5:45 AM IST (Updated: 21 May 2019 5:23 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்து வீட்டுக்கு செல்வார்கள் என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகள், நாங்கள் எதிர்பார்த்தது போல வந்துள்ளது. கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று ஏற்கனவே நான் கூறி இருந்தேன். நான் கூறியதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்து நான் கூறியதை நம்பி இருப்பார்கள். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மத்தியில் 5 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்பட்டது. மக்கள் எதிரபார்த்தது போல ஆட்சி நடைபெற்றது. பா.ஜனதா ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் நரேந்திர மோடியின் தலைமை தேவை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியின் தோல்விக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக பா.ஜனதா போராடி வருகிறது. கூட்டணி அரசின் தோல்வியை மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். கூட்டணி அரசின் செயல்பாடுகளால் வெறுத்து போன மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர். இந்த தேர்தலில் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா, வீரப்ப மொய்லி தோல்வி அடைந்து வீட்டுக்கு செல்வார்கள். மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் வெற்றி பெற போவதில்லை. அவரும் தோல்வி அடைவது உறுதி.

இடைத்தேர்தலில் குந்துகோல் மற்றும் சிஞ்சோலி தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும். தேர்தல் முடிவுகள் வெளியானதும் கூட்டணி ஆட்சியில் விரிசல் ஏற்படும். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் மோதிக் கொண்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியானதும் அந்த மோதல் இன்னும் தீவிரமாகும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். கூட்டணி ஆட்சி என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story