கூடலூரில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி போலீஸ்காரர் படுகாயம்
கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி போக்குவரத்து போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
கூடலூர்,
கோடை சீசனையொட்டி அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். கேரளா, கர்நாடகாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகிறது. மலைப்பாதை என்பதால் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை.
இதனால் கூடலூரில் வாகன விபத்துகள் தொடர் நிகழ்வாகி வருகிறது. நேற்று பகல் 3 மணிக்கு ஊட்டியில் இருந்து ஒரு கார் கூடலூர் பழைய பஸ் நிலையம் வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து தானியங்கி சிக்னல் பகுதியில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அதே பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரர் பாக்கியநாதன் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் சாலையோரம் வைத்திருந்த இரும்பு தடுப்பு மீது கார் மோதியது. அப்போது இரும்பு தடுப்பு போக்குவரத்து போலீஸ்காரர் மீது வேகமாக மோதியது. இதை சற்றும் எதிர்பாராத பாக்கியநாதன் பலத்த காயம் அடைந்தார். மேலும் வலதுபுற கையில் ரத்தம் வழிந்தோடியது. இதைகண்ட பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். பின்னர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யாசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சதீஷ் உள்ளிட்ட போலீசார் நேரில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் ஊட்டியில் இருந்து மைசூரு நோக்கி சென்ற சுற்றுலா வேன் ஒன்று ஹெல்த்கேம்ப் பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைபாதை மீது ஏறி நின்றது.
இதைக்கண்ட வாகன ஓட்டிகள் சிலர் ஓடி வந்து வேனின் டயர்களுக்கு இடையே கற்களை போட்டு தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story