பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 May 2019 4:30 AM IST (Updated: 22 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் 78.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மொத்தம் 1,644 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவினை உறுதி செய்த எந்திரங்கள் (வி.வி.பேட்), கட்டுப்பாட்டு எந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அதில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படைவீரர்கள், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைகள், கல்லூரி நுழைவு வாயில்கள் முழுவதும் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான அறைகள் ஆகியவற்றை 59 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. முதலாவதாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்கள் மூலம் அளிக்கப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், எண்ணப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 24 சுற்றுகளாகவும், குளித்தலை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், லால்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், முசிறி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 19 சுற்றுகளாகவும், துறையூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், கண்காணிப்பு உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரம் அறிவிப்பு பலகையில் எழுதுவார்கள். இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிப்பெருக்கியிலும் மேற்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்படும். இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 பேர் ஈடுபட உள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருகை தரும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நிகழ்வை பார்வையிடும் பொருட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊடக மையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் சுற்றிலும், அந்த கல்லூரி நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரை கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் என்.ஆர்.சிவபதி, தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ராஜசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முத்துலட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நாளை மறுநாள் மாலை வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் தெரிந்து விடும். இதனை அறிய பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களும் ஆவலாக உள்ளனர். 

Next Story