வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்


வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 4:30 AM IST (Updated: 22 May 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடை பெற்றது.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தளவாபாளைம் எம்.குமராசாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) காலையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி பல்வேறு சுற்றுகளில் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்கு எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைப்பது, வேட்பாளர்களின் முகவர்கள் அமருவதற்கான வசதியை ஏற்படுத்துதல், பாதுகாப்புக்காக கம்பிவலை அமைப்பது, வாக்கு எண்ணும் பணிகளை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வை யிடுவது போன்ற ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தின் போது, வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும்போது எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை அணிந்து வர வேண்டும் என்பன உள்ளிட்டவை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குலுக்கல் முறையில் தேர்வு

கூட்டம் முடிந்ததும் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு காலை 5 மணிக்கு முன்னதாகவே வந்துவிடுவார்கள். அவர்கள் எந்தெந்த மேஜையில் பணியாற்ற உள்ளார்கள் என்பது பற்றி கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு தெரியவரும்.

அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். 8.30 மணிக்கு பிறகு மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். மேலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்போது கைப்பேசி, லேப்டாப், ஐ-பேட் உள்பட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் எடுத்துவரக்கூடாது. சாதாரண கால்குலேட்டர் மட்டும் தேவைப்பட்டால் எடுத்து வரலாம்.

எத்தனை சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை?

வாக்குகள் எண்ணும் பணிக்காக ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு வாக்குகள் எண்ணும் மேஜைக்கும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் என 3 பேர் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளரால் மேற்கொள்ளப்படும்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளில் வேடச்சந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுகளும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு 18 சுற்றுகளும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு 24 சுற்றுகளும், விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும் இருக்கும். அதே போல அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை 18 சுற்றுகள் இருக்கும்.

வி.வி.பேட் எந்திர சீட்டுகளுடன் ஒப்பீடு

வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வாக்குகளும் குறிக்கப்பட்ட பின்னர் வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளரால் கையொப்பம் இடப்பட்டு, அப்போது இருக்கும் அனைத்து முகவர்களிடமும் கையொப்பம் பெறப்படும். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் வாக்குப்பதிவு தணி்க்கை எந்திரங்களில் (வி.வி.பேட்.) ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் வீதம் குலுக்கல் முறையில் தேர்ந் தெடுக்கப்படும்.

அவ்வாறு தேர்வுசெய்யப் படும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வி.வி.பேட் எந்திரங்களில் சேகரமாகியுள்ள காகித சீட்டுகள் வேட்பாளர்கள் வாரியாக எண்ணி அவற்றை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கப் படும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளுக்கும், வி.வி.பேட் எந்திரங்களில் சேகரமாகியுள்ள காகித சீட்டுகளுக்கும் இடையில் வேறுபாடு இருப்பின் வி.வி.பேட் எந்திரத்தில் சேகரமாகியுள்ள காகித சீட்டுகளின் எண்ணிக்கையே இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேலும் வாக்கு எண்ணும் மையம் பாதுகாப்பு பணிக்காக எல்லை பாதுகாப்பு மற்றும் காவல் துறையை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் பணியை பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியை கண்காணிக்க ஸ்ரீஹரி பிரதாப் சாஹியும், கிருஷ்ணராபுரம், கரூர், வேடச்சந்தூர் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க பிரசாந்த் குமாரும், மணப்பாறை மற்றும் விராலிமலை தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணிகளை கண்காணிக்க டி.கே.வினித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story