நாளை ஓட்டு எண்ணிக்கை: முகவர்கள் காலை 6 மணிக்கு முன்பாக மையத்திற்கு வர வேண்டும் கலெக்டர் தகவல்


நாளை ஓட்டு எண்ணிக்கை: முகவர்கள் காலை 6 மணிக்கு முன்பாக மையத்திற்கு வர வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 9:07 PM GMT)

கிருஷ்ணகிரியில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு முகவர்கள் காலை 6 மணிக்கு முன்பாகவே மையத்திற்கு வர வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள், பொது முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அமர வேண்டும். பிற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அவரது பொது முகவர் ஆகியோர் மட்டும் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்கு எண்ணும் பகுதிகளுக்கும் செல்ல இயலும். போட்டியிடும் வேட்பாளர் அல்லது முகவர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே வாக்கு எண்ணும் ஒரு மேசையில் இருப்பதற்கு அனுமதி உண்டு.

3 நுழைவு வாயில்

தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு ஒரு முகவர் நியமிக்கப்படுவார்கள். முகவர்களை நியமனம் செய்வதற்கான படிவம் 18-ஐ 3 தினங்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். முகவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை தயார் செய்து, ஒப்புதல் பெற்று அவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகவர்களுக்கான அடையாள அட்டையில் வேட்பாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். முகவர்கள் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்துவிட வேண்டும்.

செல்போன், தீப்பெட்டி, சிகரெட் மற்றும் கூர்மையான பொருட்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் கொண்டு வர அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்கு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு 3 நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, தேர்தல் தனி தாசில்தார் ராமசந்திரன், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story