தென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


தென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 22 May 2019 4:45 AM IST (Updated: 22 May 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தென்காசி,

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் எந்திரங்கள் போன்றவை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையடுத்து அந்த வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில், அங்கு ஜெனரேட்டரும் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் கூறுகையில், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகா மேற்பார்வையில், 160 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை (வியாழக்கிழமை) இங்கு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்“ என்று தெரிவித்தார்.


Next Story