சாகச பிரியர்களுக்கேற்ற பி.எம்.டபிள்யு. எப்.850 ஜி.எஸ்.
இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சாகச பிரியர்களுக்கென அதிக குதிரை சக்தி கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது
பி.எம்.டபிள்யூ. எப்.850 ஜி.எஸ். அட்வெஞ்சர் என்ற பெயரில் வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ.15.40 லட்சமாகும். சாகச பிரியர்களுக்கென்றே பிரத்யேகமாக இது வடிவமைக்கப்பட்டதாகும். ஜி.எஸ். பிரிவில் இந்நிறுவனத்தின் அடிப்படை மாடல் மோட்டார் சைக்கிளை விட இது ரூ.2.45 லட்சம் கூடுதலாகும்.
இதன் பெட்ரோல் டேங்க் 23 லிட்டர் பெட்ரோல் பிடிக்கும் அளவுக்கு பெரியது. மோதினால் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காப்பு சார்ந்த விஷயங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த மோட்டார் சைக்கிளின் எடை 244 கிலோவாக உள்ளது. அடிப்படை மாடல் எடை 229 கிலோ மட்டுமே. இந்த மாடல் இருக்கையின் உயரம் 875 மி.மீ. ஆகும். அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான பின்பக்க பிரேக், கியர் லீவர் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இது 853 சி.சி. திறனுடன் இரட்டை சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது.
90 ஹெச்.பி. திறனை 8 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும், 86 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை 6,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் ஆட்டோமேடிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் (ஏ.எஸ்.சி.) வசதி உள்ளது. இத்துடன் டைனமிக் டிராசன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ். உள்ளிட்டவையும் இதில் உள்ளன. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் (ரூ.13.5 லட்சம்), டிரையம்ப் டைகர் 800 எக்ஸ்.சி.ஏ. (ரூ.15.16 லட்சம்) ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story