ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 4:03 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபொன்னேரி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்குள்ள மந்தை தெரு, கீழ்தெரு போன்ற பகுதிகளில் மட்டும் குடிநீர் சீராக வழங்கப்படுகிறது. மேல் தெரு பகுதியில் உள்ள பொது குழாய்களுக்கு குடிநீர் சரியாக வருவதில்லை. இதனால் குடிநீருக்காக மந்தை தெரு, கீழ்தெருவுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வந்தால், அந்த பகுதியில் உள்ளவர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என கூறுகின்றனர்.

மேலும் கீழ்தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு பணம் செலுத்தாமல் முறைகேடாக குழாய் அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி விடுகின்றனர். இதனால் மேல் தெருவுக்கு குடிநீர் வருவதில்லை. எனவே முறைகேடாக உள்ள குடிநீர் குழாய்களை துண்டிக்க வேண்டும். மேலும் குடிநீர் ஆபரேட்டர் ஆண்டாள் குடிநீர் வழங்குவதில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார் என ஊராட்சி செயலாளர் சின்னதம்பி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது மேல்தெரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஏலகிரிமலை ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் சின்னதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story