பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர், முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர், முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 23 May 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வேட்பாளர், முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. இதையடுத்து காலை 8 மணி முதல் தபால் ஓட்டுகள், மின்னணு அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்படுவதற்காக எடுக்கப்படும்.

பதிவேற்றம்

ஒரே ஒரு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் அஞ்சல் வாக்குச் சீட்டு எண்ணுகை ஆரம்பிக்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு பிறகே, அந்த சட்டமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். சட்டமன்ற தொகுதி அளவில் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை இறுதியிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்த பிறகு அதன் விவரத்தினை Suv-it-ha Po-rt-al -ல் பதிவேற்றம் செய்வார்.

வெற்றிக்கான இடைவெளி தள்ளுபடி செய்யப்பட்ட தபால் ஓட்டுகளின் எண்ணிக்கைகளை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் அனைத்து தள்ளுபடி செய்யப்பட்ட தபால் வாக்குப்பதிவுகளை மீண்டும் எண்ண வேண்டும். இறுதியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கட்டாயமாக எண்ண வேண்டிய குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 5 வாக்குச்சாவடிகளின் ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி, மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தா தலைமையில் நடந்தது. 

Next Story