கடலூர் நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


கடலூர் நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 9:39 PM GMT)

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு எந்திரங்களும், வி.வி.பேட் கருவிகளும் வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தினந்தோறும் சென்று ஆய்வு நடத்தி வந்தனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைக்கு சென்று, அங்கு செய்துள்ள பணிகளை பார்வையிட்டனர். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளில் சீல் சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து வேட்பாளர்கள், முகவர்கள் அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வந்தால் மட்டுமே உள்ளே வர அனுமதிக்க வேண்டும். செல்போன் வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது போன்ற பல்வேறு அறிவுரைகளை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு வழங்கினர்.

மேலும் மாவட்ட அளவிலான அலுவலர்கள், வேட்பாளர்கள், முதன்மை முகவர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை சென்று பார்வையிட்டு, போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினர். அனுமதியின்றி யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவோருக்கு குடிநீர், கழிவறை போன்ற தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் கணேஷ் பி.பாட்டீலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், சப்-கலெக்டர்கள் சரயூ, பிரசாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, ஸ்ரீதரன், லோகநாதன், நாகராஜன், தாசில்தார்கள் செல்வக்குமார், கீதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story