அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி: கூட்டணி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு - சித்தராமையா பேச்சு


அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி: கூட்டணி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு - சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 22 May 2019 11:45 PM GMT (Updated: 22 May 2019 9:41 PM GMT)

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்ற கூட்டணி அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரு, 

மைசூருவில் நிருபதுங்கா கன்னட வழி அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி கல்லூரியை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கற்றுக்கொடுக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். நமது மொழி, நிலம், நீர் ஆகிய விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளமாட்டேன். கூட்டணி ஆட்சியில் பொது செயல்திட்டம் வரையறுத்துள்ளோம். அதில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்குவது பற்றி எந்த முடிவும் செய்யவில்லை. இதுதொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து நேரில் பேசுவேன்.

பொதுமக்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பது போலீசாரின் கடமை. ஆனால் சமீபகாலமாக போலீசார் பொதுஇடங்களில் ஒருவிதமாகவும், போலீஸ் நிலையத்திற்குள் வேறுவிதமாகவும் மக்களிடம் பேசி வருகிறார்கள். இதனால் போலீசாரை பொதுமக்கள் நம்பாமல் உள்ளனர். மனிதநேயமிக்க போலீசாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகிறார்கள். ஆனால் இதனை பா.ஜனதாவினர் மறுத்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தல்களில் மட்டும் வெற்றி பெற்று வருகிறது. ஆனால் பொதுத்தேர்தலில் பா.ஜனதா மட்டுமே வெற்றி பெறுகிறது. இதனால் தான் நாங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறோம்.

இதுவரை நடந்த தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story