தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா : சிவசேனாவில் இணைந்தார்


தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா : சிவசேனாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 22 May 2019 10:41 PM GMT (Updated: 22 May 2019 10:41 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.

மும்பை, 

பீட் மாவட்டத்தை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர். இவர் முன்னாள் மந்திரியும் ஆவார். அண்மைகாலமாக இவர் தேசியவாத காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.

மேலும் கட்சியில் இருந்து தான் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தனஞ்செய் முண்டேக்கு தான் கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டு வருவதாகவும் தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று திடீரென அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவர் சபாநாயகர் ஹரிபாவு பாக்டேவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்த அவர், உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி அவர் நேற்று மாலை மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் உத்தவ் தாக்கரேயை சந்தித்து தன்னை சிவசேனாவில் இணைத்துக் கொண்டார்.

Next Story