இன்று ஓட்டு எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் - செல்போனுக்கு அனுமதியில்லை


இன்று ஓட்டு எண்ணிக்கை, வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் - செல்போனுக்கு அனுமதியில்லை
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 23 May 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை,

மதுரை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகிறது. மதுரை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேலூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை 3 விதமாக நடைபெறும். தபால் ஓட்டுகள், ராணுவத்தினர் போட்ட ஓட்டுகள் மற்றும் ஓட்டு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள். இதுவரை மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 20 தபால் ஓட்டுகள் வந்துள்ளன. நாளை (இன்று) காலை 8 மணி வரை இந்த ஓட்டுகள் பெறப்படும்.

ஓட்டு எந்திரத்தில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு சட்டசபை வாரியாக தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றுகளின் ஓட்டுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து சுற்றுகளின் ஓட்டுகள் அறிவிக்கப்பட்டாலும், வெற்றி வேட்பாளர் யார் என்பது வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்ட பின்பு தான் அறிவிக்கப்படும்.

அதாவது ஒரு சட்டசபைக்கு 5 வி.வி.பேட் எந்திரம் என்ற அடிப்படையில் 30 வி.வி.பேட் எந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். ஒப்புகை சீட்டு எண்ணிக்கையும், எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதில் வித்தியாசம் இருக்க வாய்ப்பு இல்லை. அதில் ஏதும் இருந்தால் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார் என யாரும் செல்போன் கொண்டு வர அனுமதியில்லை. வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் பேப்பர், பேனா ஆகியவை மட்டுமே கொண்டு செல்லலாம். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே வர வேண்டும். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும் போது, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை காந்தி மியூசியம் பகுதியில் பார்க்கிங் செய்யலாம். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
1 More update

Next Story