நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். உள்ளே வரும் அரசு வாகனங்கள் மற்றும் ஆண்கள், பெண்களை தனித்தனியாக போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால் மற்றும் அரசியல் கட்சிமுகவர்கள் முன்னிலையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான அறைகளில் வைக்கப்பட்டு இருந்த சீல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. பெட்டிகளில் இருந்து தபால் ஓட்டுகள் மேஜையில் கொட்டப்பட்டது. அதனை அரசு ஊழியர்கள் பிரித்து, முகவர்களிடம் காண்பித்து ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணுவதை நேரடியாக முகவர்கள் பார்க்கும் வகையில் கம்பி வலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஓட்டு எண்ணுவதற்காக 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தது. ஓட்டு எண்ணுவதை கண்காணிப்பதற்காக கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டது.
அந்தந்த தொகுதிகளுக்கு என்று பணியில் ஈடுபட்டவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வந்து மேஜையில் வைத்து ஓட்டுகளை எண்ணினார்கள். ஒரு மேஜையில் 3 பேர் பணியில் இருந்தனர். ஓட்டு எண்ணும் அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் அந்தந்த அறைகளில் உள்ள தகவல் பலகையில் ஓட்டுகள் எண்ணிக்கை வரிசையாக குறிப்பிடப்பட்டது. மேலும் சுற்று முடிவுகளை தேர்தல் அதிகாரி அறிவித்தார். சுற்று விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டன. இதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் கண்காணித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 30 எந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்பட்டன. முன்னதாக வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் வி.வி.பேட் எந்திரங்களில் இருந்த ஒப்புகை சீட்டுகளை வெளியே எடுத்து, முகவர்களிடம் காண்பித்து ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஒப்புகை சீட்டுகளில் பதிவான ஓட்டுகளும், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் சரியாக உள்ளதா என்று பார்க்கப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கையை தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அரசு ஊழியர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணியளவில் முடிந்தது.
இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான ஆ.ராசா மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரத்து 463 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜன் 3 லட்சத்து 41 ஆயிரத்து 649 ஓட்டுகளை பெற்றார். இதன் மூலம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 814 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி பெற்றார்.
இதையொட்டி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க. நிர்வாகி அனீபா தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதேபோல் புதிய பஸ் நிலையம் பகுதியில் தி.மு.க. நிர்வாகி தாகீர் தலைமையில் தாரை தப்பட்டைகள் அடித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதேபோல் மத்தியில் மீண்டும் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. இதையொட்டி கூடலூர் நகரில் பா.ஜனதா நகர செயலாளர் ரவி தலைமையில் பா.ஜனதாவினர் கையில் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தாரை தப்பட்டைகள் அடித்தும், நரேந்திர மோடி வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story