தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது திருநாவுக்கரசர் பேட்டி


தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 24 May 2019 4:45 AM IST (Updated: 24 May 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்னும் மோடிக்கு எதிரான அலைதான் வீசி வருகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து இருக்கிறார்கள் என்பதுடன் அள்ளிக்கொட்டி இருக்கிறார்கள். இதற்கு காரணம் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவான நிலையில் இருப்பது தான். பிற மாநிலங்களில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் முன்னிலை பெற்று இருப்பதாக செய்திகள் வந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தான் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறப்பட்டாலும் தமிழகத்தை பொறுத்தவரை மோடிக்கு எதிரான அலைதான் இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது என்பதைதான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பை அளித்து இருக்கிறார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நான் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு வாக்காளர்கள் அளித்து இருக்கும் ஆதரவு மகிழ்ச்சி அடைய வைத்து இருக்கிறது. திருச்சி வாக்காளர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தார்கள். ஆனாலும் அவர்களால் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெறமுடியவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இப்போதே பிரதமராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. அவர் 100 வயது வரை வாழ்வார். அவர் நினைத்து இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் 2-வது முறையாக பிரதமராக அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு பதிலாக பிரதமர் பதவியை ஏற்று இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story