திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் வெற்றி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 2,396 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மதுரை,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 2-ம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்தது. அத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் சேர்த்து நடத்தப்பட்டது. இதற்கிடையே மேலும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் கடந்த 19-ந்தேதி தனியாக நடைபெற்றது.
இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன், அ.தி.மு.க. சார்பில் எஸ்.முனியாண்டி, அ.ம.மு.க. சார்பில் மகேந்திரன், ம.நீ.ம. சார்பில் சக்திவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் ரேவதி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 32 பேரும் களத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 22 சுற்றுகளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறந்து எண்ணப்பட்டன. முன்னதாக தபால் ஓட்டுகள் எண்ணும் போது சலசலப்பு ஏற்பட்டது. அப்போது தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஆரம்பம் முதலே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் தி.மு.க. வேட்பாளர் சரவணன் அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். இடையிடையே சில சுற்றுகளில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டி முன்னிலை வகித்தார்.
17-வது சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது. அதனை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்த எந்திரத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பது தெரியவில்லை. பூஜ்ஜியம் என்றே காண்பித்தது. இதையடுத்து அந்த மின்னணு எந்திரம் சரிசெய்வதற்காக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மற்ற வாக்குப்பதிவு எந்திரங்கள் திறந்து எண்ணப்பட்டன.
22 சுற்றுகள் முடிவில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் 2,396 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
டாக்டர் சரவணன் (தி.மு.க.) - 85,434
முனியாண்டி (அ.தி.மு.க.) - 83,038
மகேந்திரன் (அ.ம.மு.க.) - 31,199
சக்திவேல் (ம.நீ.ம.) - 12,610
ரேவதி (நாம் தமிழர்) - 5,467
Related Tags :
Next Story