‘மோடி அலை இந்த முறை சுனாமியாக மாறி விட்டது’ முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து


‘மோடி அலை இந்த முறை சுனாமியாக மாறி விட்டது’ முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
x
தினத்தந்தி 23 May 2019 11:45 PM GMT (Updated: 23 May 2019 8:36 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மோடி அலை இந்த முறை சுனாமியாக மாறிவிட்டது என கூறினார்.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பா.ஜனதா கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டும் இன்றி மராட்டிய மாநிலத்திலும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முந்தைய 2014-ம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியது. இந்த முறை அது சுனாமியாக மாறிவிட்டது. வெற்றிபெற்ற தொகுதிகள் அதிகரித்திருப்பதுடன் எங்களின் பொறுப்பும் அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பணிகள் மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகள் மக்களை எங்கள் பக்கம் திரும்பி பார்க்க செய்து மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். மராட்டியத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் முதல்-மந்திரி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “இரண்டு கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒருங்கிணைப்புடன் செயல்பட்டன. இதன் காரணமாகவே இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகளை வெற்றி பெற முடிந்தது” என்றார்.

Next Story