நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது: ஞானதிரவியம் (தி.மு.க.) - 5,22,623 மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)-3,37,166


நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது: ஞானதிரவியம் (தி.மு.க.) - 5,22,623 மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)-3,37,166
x
தினத்தந்தி 24 May 2019 5:00 AM IST (Updated: 24 May 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் 5,22,623 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளர் 3,37,166 வாக்குகளும் பெற்றனர்.

நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியன், தி.மு.க. சார்பில் ஞானதிரவியம், அ.ம.மு.க. சார்பில் மைக்கேல் ராயப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் வெண்ணிமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நெல்லை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 46 ஆயிரத்து 212 பேர் ஆவர். கடந்த மாதம் 18-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 31 ஆயிரத்து 547 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். இது 66.71 சதவீத வாக்குப்பதிவு ஆகும். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தொகுதியில் அடங்கிய நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக 14 டேபிள்கள் போடப்பட்டு இருந்தன. அவற்றில் நியமிக்கப்பட்டு இருந்த ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

சரியாக காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷில்பா முன்னிலையில் நடந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் அதிக வாக்குகள் பெற்றார். நெல்லை தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்பட்டன. இந்த சுற்றுகளின் முடிவின்படி நேற்று இரவு தேர்தல் முடிவுகள் அறிக்கப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளரை விட தி.மு.க. வேட்பாளர் 1,85,457 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார். இந்த வெற்றியின் மூலம் அ.தி.மு.க. கைவசம் இருந்த நெல்லை தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

இந்த வெற்றியை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இதையடுத்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷில்பா வழங்கினார். அப்போது, தேர்தல் பார்வையாளர் பகவத்சிங் குலேஷ், திட்ட இயக்குனர் பழனி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நெல்லை தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-

1) ஞானதிரவியம் (தி.மு.க.)-5,22,623,  2) மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)-3,37,166,  3) மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.)-62,209,  4) சத்யா (நாம் தமிழர் கட்சி)-49,898,  5) வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்)-23,100,  6) வி.மகாராஜன் (சுயே.)-5,137,  7) ஏ.மகாராஜன் (சுயே.)-3,940,  8) இசக்கியம்மாள் (பகுஜன் சமாஜ் கட்சி)-3,462,  9) எஸ்.முருகேசன் (சுயே.)-3,430,  10) பி.மனோகரன் (சுயே.)-2,095,  11) ஜி.மணிகண்டன் (சுயே.)-1,958,  12) ராமகிருஷ்ணன் (நாம் இந்தியர் கட்சி)-1,688,  13) பால்சாலமோன் பாண்டியன் (சுயே.)-1,407,  14) எஸ்.சிவசங்கர் (ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர்)-1,251,  15) ஆர்.செல்வகணேசன் (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்ட்டி)-1,244,  16) பி.மணிகண்டன் (சுயே.)-1,084,  
17) ரத்தினசிகாமணி (சுயே.)-934,  18) இந்துராணி (சுயே.)-896,  19) பகவதிகேசன் (சுயே.)-879,  20) செல்வபிரகாஷ் (சுயே.)-779,  21) ராஜ்குமார் (சுயே.)-771,  22) மோகன்ராஜ் (சுயே.)-630,  23) வி.ராஜீவ் (சுயே.)-628,  24) ராமமூர்த்தி (சுயே.)-586,  25) ராமசாமி (சுயே.)-526,  26) கமலக்கண்ணன் (சுயே.)-479,  27) நோட்டா-10,958.


Next Story