ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி


ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 10:15 PM GMT (Updated: 24 May 2019 12:11 AM GMT)

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 96,455 ஓட்டுகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் வெற்றி பெற்றார்.

வேலூர்,

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதோடு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டன.

இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அ.செ.வில்வநாதன், அ.தி.மு.க. வேட்பாளராக ஜெ.ஜோதிராமலிங்கராஜா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கரீம்பாஷா, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக செல்வமணி, அ.ம.மு.க. வேட்பாளராக ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட 10 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் வில்வநாதன் முன்னணியில் இருந்தார். தொடர்ந்து கடைசி வரை அவர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வந்தார். 19 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 96,455 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்

-2,23,950

பதிவானவை - 1,72,547

அ.செ.வில்வநாதன்

(தி.மு.க.) - 96,455 வெற்றி

ஜெ.ஜோதிராமலிங்கராஜா (அ.தி.மு.க.) - 58,688

ஆர்.பாலசுப்பிரமணியன்

(அ.ம.மு.க.) - 8,856

செல்வமணி

(நாம் தமிழர் கட்சி) -3,127

கரீம்பாஷா (ம.நீ.ம.) - 1,853

ஷோபாபாரத் (சுயே) - 938

ராஜ்குமார்

(தமிழ்நாடு இளைஞர் கட்சி) -158

சலாவுதீன் (சுயே) - 257

எஸ்.சுசிலா (சுயே) - 151

கோபி (சுயே) - 117

நோட்டா - 1,852

செல்லாதவை - 95

இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜாவை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.

வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் வில்வநாதனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் பேபிஇந்திரா வழங்கினார். தொகுதி தேர்தல் பார்வையாளர் எப்பட் அரா உடனிருந்தார்.

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது 2-வது சுற்றில் ஒரு எந்திரமும், 10-வது சுற்றில் ஒரு எந்திரமும் பழுதாகி இருந்தது. இதனால் அதில் பதிவான வாக்குகளை எண்ண முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த 2 எந்திரங்களையும் வைத்துவிட்டு மற்ற எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணினர்.

அனைத்து ஓட்டுகளும் எண்ணி முடிக்கப்பட்டபிறகு பழுதான 2 எந்திரங்களும் எந்த மையத்தில் பயன்படுத்தப்பட்டதோ அந்த மையத்தில் பயன்படுத்தப்பட்ட ஓப்புகை சீட்டுகள் 2 சுற்றுகளாக எண்ணப்பட்டு, ஏற்கனவே எண்ணப்பட்ட ஓட்டுகளுடன் சேர்க்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் முடிவு அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. 

Next Story