வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 May 2019 3:30 AM IST (Updated: 24 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கடலூர்,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்ட 247 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது தவிர 9 அதிரடிப்படை வாகனங்கள் மற்றும் 120 வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றியடி தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் திரண்டு நின்றவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் 32 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை நடைபெற்றது.

கடலூரில் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள தேவனாம்பட்டினம் பெரியார் கல்லூரி வளாக பகுதி, மஞ்சக்குப்பம், பாரதிசாலை, பெரியார் சிலை, சீமாட்டி சிக்னல் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டார்.

அதேபோல் தி.மு.க. கட்சி அலுவலகத்தின் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாரதி சாலையில் இருந்து தேவனாம்பட்டினம் வாக்கு எண்ணிக்கை மையம் வரையிலும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

Next Story