தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்


தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன்
x
தினத்தந்தி 25 May 2019 5:00 AM IST (Updated: 24 May 2019 8:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலேயே சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றார்.

அரியலூர், 

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி), புவனகிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும், அ.ம.மு.க. சார்பில் இளவரசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவஜோதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர்.

கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இந்த தொகுதியில் 77.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரியும், அரியலூர் கலெக்டருமான விஜயலட்சுமி, தேர்தல் பொதுப்பார்வையாளர் குல்கர்னி ஆகியோர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்‘ அகற்றப்பட்டது.

எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டது. முதல் சுற்றில் திருமாவளவன் முன்னிலை வகித்தார். 2-வது சுற்றில் இருந்து 9-வது சுற்று வரை அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரனும் முன்னிலை வகித்தார். 10-வது சுற்றில் இருந்து கடைசி சுற்று வரை திருமாவளவனும், சந்திரசேகரும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்ததால் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டது. இதனால் இருதரப்பு கட்சி முகவர்களும், நிர்வாகிகளும் பரபரப்பாகவே காணப்பட்டனர்.

25-வது சுற்று முடிவில் திருமாவளவன் 4,98,401 வாக்குகளும், சந்திரசேகர் 4,95,432 வாக்குகளும், இளவரசன் (அ.ம.மு.க.) 62,219 வாக்குகளும், சிவஜோதி (நாம் தமிழர் கட்சி) 37,329 வாக்குகளும், ரவி (மக்கள் நீதி மய்யம்) 15,260 வாக்குகளும் பெற்று இருந்தனர். பின்னர் தபால் ஓட்டுகள் சேர்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தபால் வாக்குகளில் திருமாவளவனுக்கு 1,828 வாக்குகளும், சந்திரசேகருக்கு 1,578 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 142 வாக்குகளும், அ.ம.மு.க.விற்கு 89 வாக்குகளும், மக்கள் நீதி மய்யத்துக்கு 74 வாக்குகளும், நோட்டாவுக்கு 56 வாக்குகளும் கிடைத்தன. இதில் தபால் வாக்குகளில் 1,065 ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்தது. இறுதியில் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை 3,219 வாக்குகள் வித் தியாசத்தில் வென்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை தவிர 11 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

திருமாவளவன் வெற்றி பெற்றதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் உற்சாகத்தில் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

திருமாவளவனின் வெற்றி நள்ளிரவு 2.15 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றி சான்றிதழை 3 மணி அளவில் அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வழங்கினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story