தார்வார் மாவட்டத்தில் 3 மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழை
தார்வார் மாவட்டத்தில் 3 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
உப்பள்ளி,
தார்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடனும், சூறாவளி காற்றுடனும் மழை கொட்டித்தீர்த்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்ததால் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின்போது வீசிய சூறாவளி காற்றினால் ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. மின்பங்கங்களும் முறிந்து விழுந்தன. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருளில் மூழ்கின.
தார்வார் டவுன் ஆலூர் வெங்கடராயா சர்க்கிள், கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள், உப்பள்ளி லெமண்டன் ரோடு, மண்டூர் சாலை ஆகிய சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததாலும் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பலத்த மழையால் தார்வார் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு நகரில் சரிந்து விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
அதேபோல் மின்சாரத்துறை ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைத்தனர். அதன்பின்னர் இருளில் மூழ்கியிருந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தார்வார் மாவட்டம் முழுவதும் மீட்பு பணி நடந்து வருகிறது.
மழையால் ஏற்பட்டுள்ள சேத மதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கிட்டு வருகிறார்கள்.