கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம், வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது
கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது.
காட்டுமன்னார்கோவில்,
லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. அதோடு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.
47.50 அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் 45.40 அடியாக குறைந்ததால் கடந்த 16-ந் தேதி அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 46 அடியானது.
தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருந்ததால் கீழணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. கோடை வெயில் சுட்டெரிப்பதால் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 45 கனஅடி முதல் 60 கன அடி வரை தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவும், கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதாலும், லால்பேட்டையில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது.
கோடைகாலத்தில் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய அளவில் தண்ணீரை சேமித்து வைத்து வருகிறது.
ஏனெனில் ஏரியில் 39 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக நீர்மட்டம் அதற்கு கீழே குறையாமல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story