கவுந்தப்பாடி அருகே வேனில் மணல் கடத்திய 2 பேர் கைது தப்பி ஓடிய ஒருவருக்கு வலைவீச்சு


கவுந்தப்பாடி அருகே வேனில் மணல் கடத்திய 2 பேர் கைது தப்பி ஓடிய ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 May 2019 3:45 AM IST (Updated: 24 May 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி அருகே வேனில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கவுந்தப்பாடி,

கவுந்தப்பாடி போலீசார் செங்கப்பிடாரியம்மன் கோவில் அருகே பெருந்தலையூர்– பவானி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு ஒரு வேன் வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அதில் 3 பேர் இருந்தார்கள். போலீசாரை பார்த்ததும் அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் உஷாரடைந்த போலீசார் எஞ்சிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நந்தீஸ், குமாரசாமி ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் பெயர் வடிவேல் என்பதும், 3 பேரும் சேர்ந்து பவானி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்த முயன்றதும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து மணலுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் நந்தீஸ், குமாரசாமி இருவரையும் கைது செய்தார்கள். மேலும் தப்பி ஓடிய வடிவேலை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story