மானாமதுரை தொகுதியில் மீண்டும் தோல்வியை தழுவிய தி.மு.க.


மானாமதுரை தொகுதியில் மீண்டும் தோல்வியை தழுவிய தி.மு.க.
x
தினத்தந்தி 24 May 2019 10:30 PM GMT (Updated: 24 May 2019 6:43 PM GMT)

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து தி.மு.க. தோல்வியடைந்து வருவதால் கட்சியினர் மத்தியில் உற்சாகம் குறைந்து வருவதுடன், கவலையடைந்து வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற தொகுதி 1952–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய இரு ஒன்றியங்கள் இருந்த நிலையில் கடந்த 2011–ல் தொகுதி சீரமைப்பின் போது இளையான்குடி தாலுகாவும் இணைக்கப்பட்டது. மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வினரால் மானம் காத்த மானாமதுரை என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 4–வது முறையாக இந்த தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நபர்கள் அல்லது வெளியூர் நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதே தோல்விக்கு காரணம் என தொண்டர்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது. இந்த தேர்தலில் திருப்புவனம், மானாமதுரை பேரூராட்சிகள் கைவிட்டாலும் இளையான்குடி ஒன்றியத்தில் தி.மு.க.விற்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

கடந்த 2016 தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்ற தி.மு.க. இந்த தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் திருப்புவனத்தை சேர்ந்த சோனையா, டாக்டர் துரைப்பாண்டியனுக்கு பிறகு தி.மு.க.வினர் யாரும் வெற்றி பெறவில்லை. பெரும்பாலும் இந்த தொகுதியை கூட்டணிக்கே ஒதுக்கியுள்ளனர்.

கடந்த 3 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்துள்ளது. தொடர்ந்து மானாமதுரை தொகுதியில் தி.மு.க. தோல்வியடைந்து வருவதால் அதந்த கட்சியினர் கவலையடைந்து வருகின்றனர்.


Next Story