மான் வேட்டையாடிய வழக்கில், முக்கிய குற்றவாளி கூட்டாளிகளுடன் கைது
ஆனைமலை அருகே கடமானை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வேட்டையாடிய வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தபோது வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆனைமலை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள செம்மேடு பகுதியைச் சேர்ந்த சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கடந்த 4-ந்தேதி வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டையாடியதாக 4 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான தமிழரசனை கேரளாவில் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் கூறியதாவது:- செம்மனாம்பதி அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் ஒரு கும்பல் பெண் கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செம்மேட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி, பெரியபோது கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் கேரள மாநிலம் வண்ணாமடை அருகே உள்ள நெடும்பாறையைச் பிரகாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தோம். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மாரப்பகவுண்டன்புதூரை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பவரை தேடி வந்தோம்.
அவர் கேரள மாநிலம் வண்ணாமடை என்ற பகுதியில் கோழிக்கடை வைத்து நடத்தி வரும் தாய்மாமன் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வனத்துறையை சேர்ந்த தனிப்படையினர் அங்கு சென்று தமிழரசனை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், மான்வேட்டையில் தொடர்புடைய மாரப்பகவுண்டன் புதூரை சேர்ந்த தங்கவேல் மகன் கணேஷ் (35), கந்தசாமி மகன் காளிமுத்து என்கிற கனகராஜ் (55) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
காட்டு யானையைக்கொன்று தந்தம் வேட்டையாடிய வழக்கில் தமிழரசன் கடந்த 2005-ம் ஆண்டு வனத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். அந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தமிழரசனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்த தமிழரசன் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story