கூடலூர் அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் சாவு


கூடலூர் அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 25 May 2019 4:00 AM IST (Updated: 25 May 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே மின்னல் தாக்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை 5 மணி வரை நன்கு வெயில் அடித்தது. இரவு 9 மணிக்கு கூடலூர், நடுவட்டம், முதுமலை, ஸ்ரீமதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காலநிலை காணப்பட்டது. இந்த நிலையில் நடுவட்டம் பேரூராட்சி டி.ஆர்.பஜார் பகுதியிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்திரன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து அறையில் சந்திரனின் மகன் ஆதர்ஷ் (வயது 15) கட்டிலில் படுத்து இருந்தான். அவன் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே மின்னல் தாக்கி ஆதர்ஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

மேலும் வீட்டில் வைத்திருந்த தொலைக்காட்சி உள்பட மின்சாதன பொருட்கள் எரிந்தன. இதனிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த சந்திரன் தனது மகனின் உடலை கண்டு கதறி அழுதார். பின்னர் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து ஆதர்ஷை தூக்கி கொண்டு நடுவட்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஆதர்ஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆதர்ஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நேற்று உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story