திருப்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை–பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை


திருப்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை–பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 26 May 2019 4:30 AM IST (Updated: 25 May 2019 7:14 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் உள்ள தனது மகள் திவ்யா வீட்டிற்கு சென்றார். மாலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேகருக்கு போன் செய்து, உங்கள் வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சேகர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் அறைக்குள் இருந்த பீரோ திறந்த நிலையில் கிடந்தது. பின்னர் அவர் பீரோக்குள் பார்த்த போது அதில் இருந்த 15 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து சேகர் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story