பாப்பாரப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


பாப்பாரப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 May 2019 10:00 PM GMT (Updated: 25 May 2019 3:07 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் மற்றும் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினி டேங்க் ஆகியவை மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சீராக குடிநீர் வழங்க கோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்மபுரி–பாப்பாரப்பட்டி சாலையில் வேலம்பட்டி பிரிவு ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இந்த பகுதிகளில் பல மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இந்த பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மின் மோட்டார்களை பழுது நீக்கி சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story