சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமிர்தி பூங்காவுக்கு சாம்பார் மான், பாம்பு வகைகள் கொண்டுவர முடிவு


சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமிர்தி பூங்காவுக்கு சாம்பார் மான், பாம்பு வகைகள் கொண்டுவர முடிவு
x
தினத்தந்தி 26 May 2019 4:15 AM IST (Updated: 25 May 2019 10:01 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமிர்தி பூங்காவுக்கு சாம்பார் மான், பாம்பு வகைகள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுக்கம்பாறை,

வேலூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் அமிர்தியில் சிறு மிருககாட்சி சாலை 25 ஏக்கர் பரப்பளவில் 1967-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இங்கு புள்ளிமான்கள், மயில்கள், முயல்கள், முதலைகள், நீர் பறவைகள், மலைப்பாம்பு, முள்ளம்பன்றிகள், பருந்து, கண்ணாடிவிரியன், நாகப்பாம்பு, காதல் பறவைகள் ஆகியவை தனித்தனி கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர். குறிப்பாக தீபாவளி, பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களிலும் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும். அன்றை தினங்களில் இந்த பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது அமிர்தி சிறுவன உயிரின பூங்காவுக்கு கூடுதலாக விலங்குகள் கொண்டுவர வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அதன்படி, சுருள் கொம்பு கொண்ட வெளிமான், சாம்பார் மான், பறவை வகைகளில் கூழைகிடா, செந்நாரை உள்ளிட்டவைகளும், அரியவகை மலைப்பாம்பு, விஷம் குறைவான பச்சை பாம்பு, நீர் பாம்பு உள்ளிட்ட பாம்பு வகைகளும் அமிர்தி பூங்காவுக்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த விலங்குகள் வண்டலூர் பூங்கா மற்றும் கிண்டியில் உள்ள தேசிய பூங்காவில் இருந்து கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பூங்காவில் புதிய விலங்குகள் மற்றும் உயிரினங்களின் வருகையை சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story