கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும்


கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-26T00:43:43+05:30)

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார். தொடர்ந்து மாநில செயலாளர் கண்ணியப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில பொது செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாநில பொருளாளர் பச்சைமுத்து வரவு-செலவு அறிக்கையை வாசித்தனர்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் அனைத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நெடுஞ் சாலைத்துறையில் சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசே மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் 1.1.2019-ல் உள்ளவாறு முதுநிலை பட்டியலை குறைபாடுகள் இன்றி வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். கோட்ட கணக்கர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அஞ்சல் அட்டை இயக்கம்

வேலை நிதியில் ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஊதியம் என்ற தலைப்பில் ஊதியம் வழங்க வேண்டும். தொடர்ந்து ஊழியர் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் புதுக்கோட்டை கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், துறை தலைமை தமிழக அரசும் உரிய விசாரணை செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை அஞ்சல் அட்டை இயக்கம் நடத்துவது, ஜூலை மாதம் 9-ந் தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story