காஞ்சீபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி முதியவர் படுகாயம்


காஞ்சீபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி முதியவர் படுகாயம்
x
தினத்தந்தி 26 May 2019 3:30 AM IST (Updated: 26 May 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மாணவன் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் உடன் நின்று கொண்டு இருந்த முதியவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காஞ்சீபுரம்,

சென்னை மாங்காடு ரத்தினகவுண்டர் தெருவில் வசிப்பவர் ரமேஷ். இவரது மகன் அஜய் (வயது 15), இவர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்து இருந்தான்.

இந்தநிலையில் கோடை விடுமுறையையொட்டி, காஞ்சீபுரம் அடுத்த சிறுவேடலில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அஜய் வந்து இருந்தான். பிறகு, அவன் வீட்டில் இருந்து புறப்பட்டு சின்னயன்சத்திரம் கூட்ரோடு என்ற இடத்தில் உள்ள சாலையில் ஓரமாக நின்று கொண்டு இருந்தான். அங்கு ஆட்டுப்புத்தூரை சேர்ந்த பன்னீர் (60) என்ற முதியவரும் மாணவனின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது, பெங்களூரூவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேர் மீதும் மோதியது.

இதில், அஜய், பன்னீர் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் அஜய் பரிதாபமாக உயிரிழந்தான். பன்னீர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்துக்கு காரணமான கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story