துறையூரில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


துறையூரில் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 7:41 PM GMT)

துறையூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துறையூர்,

துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் பேரூராட்சியில் 3-வது வார்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 1 மாதமாக காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் கடும் வறட்சி காரணமாக இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள் குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள வயல்வெளிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் உப்பிலியபுரம் பஸ்நிறுத்தம் அருகே துறையூர்- ஆத்தூர் சாலையில் திரண்டனர். பின்னர் திடீரென அவர்கள் சாலையில் காலிக்குடங்களை வைத்து உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story