நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் தீயணைப்பு வீரர்கள் தேடுகிறார்கள்


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவர் தீயணைப்பு வீரர்கள் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 8:24 PM GMT)

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் குதித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கினார். அவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கோபி (வயது 15). இவர், பட்டாபிராம் சத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

நேற்று மதியம் கோபி, தனது நண்பர்கள் 6 பேருடன் முத்தாபுதுபேட்டை அடுத்த பாலவேடு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். சுமார் 30 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் தற்போது 15 அடி தண்ணீர் உள்ளது.

கோபி, தனது நண்பர்களிடம் தான் முதலில் கிணற்றில் குதிப்பதாகவும், அதன்பிறகு நீங்கள் குதியுங்கள் என்று கூறிவிட்டு கிணற்றுக்குள் குதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் மேலே எழும்பி வரவில்லை. அவர் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருட்டி விட்டதால் மின் விளக்குகள் அமைத்து, கிணற்றில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றி மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story