தஞ்சையில் வீட்டை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணி மும்முரம்


தஞ்சையில் வீட்டை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 8:28 PM GMT)

தஞ்சையில் வீட்டை ஜாக்கி மூலம் உயர்த்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

வீட்டை கட்டி பார். கல்யாணத்தை முடித்து பார் என்று பலர் சொல்வதை கேட்டிருப்போம். அந்த அளவுக்கு வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. வீடு கட்டுவதற்கு தேவையான முக்கிய மூல பொருட்களான மணல், சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

அப்படியே கஷ்டப்பட்டு வீடுகள் கட்டி குடியிருந்தாலும் அடிக்கடி சாலைகள் புனரமைக்கப்படும்போது வீடுகள் பள்ளமாகிவிடுவதால் மழை நேரங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட லிப்டிங் முறையில் வீடுகளை உயர்த்தி கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய தொழில்நுட்பம்

சென்னை போன்ற பெரும் நகரங்களில் வீடுகளை உயர்த்துவது என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதேபோன்று தஞ்சையில் பள்ளமான பகுதியில் உள்ள வீட்டை ஜாக்கி கொண்டு புதிய தொழில்நுட்பத்துடன் உயர்த்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை மானம்புச் சாவடி செண்பகவள்ளி நகரில் வசித்து வருபவர் உமாபதி. மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீடு கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது.

சாலையில் இருந்து கொஞ்சம் உயரத்தில் வீடு கட்டப்பட்டது. ஆனால் அடிக்கடி சாலை சீரமைப்பு பணி நடைபெற்றதால் சாலையானது உயர்ந்து வீடு பள்ளத்தில் இருப்பது போல் ஆகிவிட்டது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகுவதுடன், பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டால் கழிவுநீர் வீட்டிற்குள் வரும் நிலை உருவானது.

3 அடி உயர்த்தும் பணி

மேலும் வீட்டின் மேல்பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டவும் முடிவு செய்தார். வீடு கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையிலும் வலுவானதாக இருக்கிறது. இதனால் பழமைமாறாமல் வீட்டை 3 அடி உயர்த்த உமாபதி முடிவு செய்தார். இதற்காக சென்னையை சேர்ந்த கட்டுமான தொழில்நுட்ப குழுவினரை நாடினார். அவர்கள் வீட்டை பார்த்துவிட்டு கட்டிடம் வலிமையாக இருந்ததால் லிப்டிங் தொழில்நுட்பத்தில் வீட்டை 3 அடிக்கு உயர்த்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக முதல்கட்டமாக 300 ஜாக்கிகள்(பளுதூக்கி) பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியுடன் ஒவ்வொரு பக்கவாட்டிலும் இருந்து ஒவ்வொரு அடியாக உயர்த்தப்பட உள்ளது. இந்த பணி இன்னும் 15 தினங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து உமாபதி கூறும்போது, தற்போது வசிக்கும் வீட்டின் மாடியில் புதிதாக வீடு கட்ட இருக்கிறேன். அதற்காக சாலையை விட கொஞ்சம் பள்ளத்தில் இருக்கும் வீட்டை உயர்த்த முடிவு செய்தேன். இதற்கு ரூ.2½ லட்சம் வரை செலவாகும். இப்படி செய்வதால் வீட்டின் தரைதளம் மட்டும் சேதம் அடையும் அதை புதிதாக போட்டு கொள்ளலாம். புதிய வீடு கட்ட வேண்டும் என்றால் ரூ.15 லட்சம் வரை செலவாகும். சென்னையில் பலர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டை உயர்த்தி இருக்கிறார்கள். தஞ்சையில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டு வீடு உயர்த்தப்படுகிறது என்றார்.

Next Story