சிறிய டேங்கர் வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் அறிமுகம் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை


சிறிய டேங்கர் வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் அறிமுகம் சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 8:35 PM GMT)

சென்னையில் 2 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய வகை டேங்கர் வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. ஜூன் 10-ந் தேதிக்கு பிறகு ஏரிகளில் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சிக்கராயபுரம் கல்குவாரியிலும் 10 மில்லியன் லிட்டர் வீதம் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆனால் தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் விவசாய கிணறுகளில் இருந்து 45 மில்லியன் லிட்டருக்கு பதில் 95 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும் என்ற நிலையும் உயரும். எனவே ஜூன் 10-ந்தேதிக்கு பிறகு 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் இறங்கி உள்ளது. இந்த நிலை வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் கூறியதாவது:-

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்களின் கீழ் 34 ஆயிரத்து 173 தெருக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 2,484 தெருக்களில் குழாய் மூலம் குடிநீர் வராத பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. மாநகரம் முழுவதும் லாரிகள் மூலம் 6 ஆயிரம் முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளதால் 783 லாரிகள் மூலம் 8,500 தடவை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 லாரிகள், 16 ஆயிரம் லிட்டர் கொண்ட 19 லாரிகள், 9 ஆயிரம் லிட்டர் கொண்ட 432 லாரிகள், 6 ஆயிரம் லிட்டர் கொண்ட 237 லாரிகள், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரட்டை தொட்டிகள் கொண்ட 90 லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணி நடந்து வந்தது.

தேவைப்படும் தண்ணீர் ஏரியில் இருந்து 55 மில்லியன் லிட்டர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டர், வீராணம், நெய்வேலியில் இருந்து 180 மில்லியன் லிட்டர், தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் விவசாய கிணறுகளில் இருந்து 45 மில்லியன் லிட்டர், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 35 மில்லியன் லிட்டர், சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து 30 மில்லியன் லிட்டர் வீதம் 525 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.

சாதாரண வகை குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளில் ராட்சத அளவிலான தொட்டிகள் இருப்பதில்லை. இதனால் அதிகஅளவு தண்ணீரை கொண்டு வரும் டேங்கர் லாரிகளின் தண்ணீரை பிடித்து வைக்க வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் லிட்டர் கொண்ட டேங்கர் லாரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் அளவு கொண்ட ‘எச்.டி.பி.இ.’ என்று அழைக்கப்படும் டேங்கர் கொண்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் 60 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தேவைப்படுபவர்கள் www.chennaimetrowatter.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்த நாளில் இருந்து ஓரிரு நாட்களில் வினியோகம் செய்யப்படும். தொடர்ந்து 200 வாகனங்கள் வரை இயக்க திட்டமிட்டு பணியில் இறங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story