பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டத்தில் தலைவர் பேச்சு


பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டத்தில் தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 26 May 2019 4:15 AM IST (Updated: 26 May 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகளிடம் இருந்து பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் அதன் தலைவர் கருணாநிதி பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் சாய மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், வாலிபாளையத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் கையாளும் முறை மற்றும் ஆர்பிட்ரேசன் கவுன்சில் ஆகியவை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

திருப்பூர் பின்னலாடை தொழில் மட்டுமின்றி அனைத்து தொழில் செய்கிறவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதில் திருப்பூர் தொழில்துறையினர் பணம்–கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த பணத்தை பெற்றுக்கொடுப்பதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

இதில் புகார் தெரிவிக்கும் தொழில்துறையினர் முறையாக அவர்கள் தொழில் சார்ந்த சங்கங்களில் உறுப்பினராக இருக்க வேண்டும். தவறாமல் சந்தாவும் செலுத்தி வர வேண்டும். அப்போது தான் அவர்களது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். நிறுவன உரிமையாளர்கள் வரவு–செலவு கணக்குகளை நேரடியாக கையாள வேண்டும்.

முறையாக சங்கங்களில் பதிவு செய்து, வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் புகார் தெரிவிக்கலாம். அதற்கு விரைந்து தீர்வு காணப்படும். மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொடுக்கப்படும். காலம் தாழ்த்தாமல் தொழில்துறையினர் புகார் தெரிவிக்க வேண்டும். எனவே கவுன்சிலில் பல்வேறு சங்கங்கள் இணைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி பாஸ்கரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ‘‘சாயம் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் தங்களது நிறுவனங்களில் தீ விபத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து வைத்திருக்க வேண்டும்.

தீ விபத்துகளை கையாளும் முறை குறித்து தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தொழில்துறையினர் தீயணைப்பு நிலையத்தை தொடர்புகொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார். இதில் ஏராளமானவர் கலந்துகொண்டனர்.


Next Story