திருப்பூர் ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக புகார் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இருந்து அனைத்துக்கட்சியினர் வெளிநடப்பு


திருப்பூர் ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக புகார் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இருந்து அனைத்துக்கட்சியினர் வெளிநடப்பு
x
தினத்தந்தி 26 May 2019 4:45 AM IST (Updated: 26 May 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ஒன்றியத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து, திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

திருப்பூர்,

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து வாக்காளர்களுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு பணிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

அதன்படி திருப்பூர் ஒன்றியத்தில் மங்கலம், இடுவாய், முதலிபாளையம், பொங்குபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி, சொக்கனூர், பட்டம்பாளையம் ஆகிய 13 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் இருந்து 114 வார்டு உறுப்பினர்கள், 8 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கடந்த 2011–ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இருந்த மக்கள் தொகையை விட தற்போது அதிகமாக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 400 வாக்காளர்களுக்கு ஒரு வார்டு உறுப்பினர், 5 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய கவுன்சிலர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததால் வார்டுகளை மட்டும் மறுவரையறை செய்தனர்.

ஆனால் மறுவரையறை செய்து அதன் விவரத்தை அனைத்து கட்சியினரிடம் தெரிவித்தபோது, பொங்குபாளையம் ஊராட்சியில் வாக்காளர்கள் குறைவாக இருப்பதால் அந்த வாக்காளர்களை, மங்கலம் ஊராட்சியில் இணைத்து ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையாளர் மகுடேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி கனகராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஈஸ்வரமூர்த்தி, விஸ்வலிங்கசாமி, விஸ்வநாதன்(தி.மு.க.), இஸ்மாயில்(காங்கிரஸ்), பழனிசாமி, சாமிநாதன், கணேசன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), மகேந்திரன், ராஜேந்திரன், கண்ணன்(இந்திய கம்யூனிஸ்டு), ராம்குமார்(தே.மு.தி.க.) உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது.

கடந்த 2011–ம் ஆண்டு தேர்தலின்போது திருப்பூர் ஒன்றியத்தில் 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தமுறை 114 வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவர்கள் அதிக வாக்குகளை பெறும் வகையில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. பொங்குபாளையம் ஊராட்சி வாக்காளர்களை, 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள மங்கலம் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்த பின்னர் மக்கள் ஒன்றிய கவுன்சிலரிடம் முறையிட செல்வதற்கு சிரமம் ஏற்படும். அதுபோல் பொங்குபாளையம் ஊராட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கும், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. மங்கலம் ஊராட்சி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும், கோவை நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. இதனால் ஒன்றிய கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்ட பிறகு வளர்ச்சி பணிகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. நிதியை பெற்று திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் கூட சிரமம் ஏற்படும். எனவே வார்டு மறுவரையறை செய்துள்ளதை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும் என்றனர்.

ஆனால் அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே வார்டு மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது என்றும், தற்போது வாக்குச்சாவடிகள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதற்கான கூட்டம் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தி.மு.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்காரணமாக கூட்டம் பாதியிலேயே நிறைவடைந்தது. இதனால் ஒன்றிய அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story