மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்


மதுரையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்ற கும்பல்
x
தினத்தந்தி 26 May 2019 5:45 AM IST (Updated: 26 May 2019 4:22 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை கொன்று, ஒரு கும்பல் அவரது தலையை துண்டித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மதுரை,

மதுரை திருநகர் அமைதிச்சோலை பகுதியில் வசித்து வந்தவர் சவுந்தர் என்கிற சவுந்தரபாண்டியன் (வயது 43). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். சவுந்தர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 18 வழக்குகள் உள்ளன. அதில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் மட்டும் 14 வழக்குகள் உள்ளன.

மேலும் மதுரை சுப்பிரமணியபுரம், தெப்பக்குளம், செல்லூர் மற்றும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் உள்ளன. எனவே சவுந்தரை தேடப்படும் குற்றவாளியாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

எனவே சவுந்தர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது ஒரு மனைவி சிவகங்கையிலும், இன்னொரு மனைவி நெல்லை மாவட்டம் வள்ளியூரிலும் உள்ளனர். போலீசாரின் தேடுதலால் சவுந்தர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வண்டியூர் பகுதியில் குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று சவுந்தர், முத்துப்பட்டி அன்னை தெரசா நகரில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு விட்டு, மாடியில் உள்ள தனி அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், சவுந்தர் தூங்கி கொண்டிருந்த அறையினுள் நுழைந்தனர். பின்னர் உள்புறமாக தாழிட்டுக் கொண்டனர். அதன்பிறகு அவர்கள் சவுந்தரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அவரது தலையை தனியாக எடுத்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.

திடீரென்று மாடியில் இருந்து 4 பேர் இறங்கி ஓடியதால், சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் சவுந்தர் இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது சவுந்தரின் தலை வெட்டி எடுக்கப்பட்டு, வெறும் உடல் மட்டும் இருந்தது.

இதனால் அதிர்ந்து போன அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. இதற்கிடையில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் தலையை எங்கு வீசிச் சென்றார்கள்? என்ற தேடுதல் வேட்டையும் நடந்தது.

அங்கிருந்த சில கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்த போது கொலையாளிகள் பழங்காநத்தம் பாலம் அருகில் உள்ள பகுதிக்கு சென்றது தெரிந்தது. எனவே அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடி பார்த்தனர். அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் குப்பையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனை திறந்த பார்த்த போது கொலை செய்யப்பட்ட சவுந்தரின் தலை இருந்தது. போலீசார் அதனை கைப்பற்றினர்.

மேலும் கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சவுந்தர் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மதுரை நகரில் சமீபகாலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரவுடி கும்பலுக்கு இடையே நடக்கும் பகை காரணமாக கொலைகள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க முடியாமல் போலீசார் தடுமாறி கொண்டு இருக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் தி.மு.க. மண்டல தலைவரின் மருமகன் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் இன்னும் முழுமையாக கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முத்துப்பட்டியில் பட்டப்பகலில் ரவுடி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது தலையை துண்டாக எடுத்துச் சென்று குப்பையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story