வேதாரண்யம் மீனவர்களை ஆந்திர போலீசார் பிடித்து செல்ல முயன்றதால் பரபரப்பு சோதனை சாவடியில் தமிழக போலீசார் மடக்கினர்


வேதாரண்யம் மீனவர்களை ஆந்திர போலீசார் பிடித்து செல்ல முயன்றதால் பரபரப்பு சோதனை சாவடியில் தமிழக போலீசார் மடக்கினர்
x
தினத்தந்தி 26 May 2019 10:15 PM GMT (Updated: 26 May 2019 7:01 PM GMT)

ஆந்திராவில் கரை ஒதுங்கிய இலங்கை படகின் அருகே நாகை மீனவரின் வாக்கி- டாக்கி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதனால் வேதாரண்யம் மீனவர்கள் 6 பேரை ஆந்திர மாநில போலீசார் ஆந்திராவுக்கு வேனில் பிடித்து செல்ல முயன்றனர். அவர்களை பொறையாறு சோதனை சாவடி அருகே தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு மிக குறைந்த நேரத்தில் கடல் வழியாக சென்று விடலாம் என்பதால் அடிக்கடி மீன்பிடிக்க செல்லும் நாகை மீனவர்கள் காற்றின் வேகத்தில் திசைமாறி இலங்கை எல்லைக்குள் சென்று விடுகிறார்கள். இவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்று சிறையில் அடைப்பதும் பின்னர் அவர்களை விடுவிப்பதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. சில சமயங்களில் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை மீனவர்களின் படகுகள் வேதாரண்யம் பகுதியில் கரை ஒதுங்கும். இந்த படகுகளை தமிழக கடலோர காவல்படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்துவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

வாக்கி- டாக்கி

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினம் மீனவ கிராமத்தில் இலங்கையை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகு கரை ஒதுங்கியது. இது குறித்து கிருஷ்ணாபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர். படகை ஆந்திர மாநில போலீசார் கைப்பற்றிய போது படகு என்ஜின் அருகில் இருந்து ஒரு வாக்கி-டாக்கியையும் கண்டெடுத்தனர். இந்த வாக்கி- டாக்கியை போலீசார் இயக்கி பார்த்த போது அது நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(வயது49) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

முற்றுகை

இதைத்தொடர்ந்து ஆந்திர போலீசார் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறைக்கு நேற்றுமுன்தினம் வந்தனர். பின்னர் அவர்கள் மீன்வளத்துறை அதிகாரி நடேசராஜா உதவியுடன் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த ஆனந்த், சசிகுமார், ஸ்ரீநாத், சத்தியகுருபலம், அருண்குமார் மற்றும் முத்துப்பேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் ஆந்திர மாநில போலீசார் 6 மீனவர்களையும் திடீரென பிடித்து ஆந்திராவுக்கு கொண்டு செல்ல முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த மீனவ கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து ஆந்திர போலீசாரை மறித்து மீனவர்களை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மடக்கி பிடித்தனர்

இதை ஏற்க மறுத்த ஆந்திர மாநில போலீசார் மீனவர்களை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்கிறோம் என கூறி அவர்களை வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆனால் ஆந்திர மாநில போலீசார் மீனவர்களை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து செல்லாமல் 6 பேரையும் காரைக்கால் வழியாக ஆந்திராவுக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த மீனவ கிராம மக்கள் இது குறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டு ஆந்திர மாநில போலீசார் மீனவர்களுடன் சென்ற வேனை மடக்கி பிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொறையாறு சோதனை சாவடி அருகே காத்திருந்த போலீசார் அந்த வழியாக ஆந்திர மாநில போலீசார் மீனவர்களுடன் வந்த வேனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் வைத்து மீனவர்களிடம் வேதாரண்யம் போலீசார் மற்றும் ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆந்திர மாநில போலீசார் மீனவர்களிடம் வருகிற 29-ந் தேதி(புதன்கிழமை) ஆந்திர மாநில கிருஷ்ணாபட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆஜராக வேண்டும் என கூறி நோட்டீஸ் வழங்கிவிட்டு சென்றனர்.

விசாரணை

இந்தநிலையில் பிடிபட்ட 6 மீனவர்களிடமும் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் கியூபிராஞ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஆந்திராவில் கரை ஒதுங்கிய படகின் அருகே வேதாரண்யம் மீனவரின் வாக்கி- டாக்கி எப்படி சென்றது? என கேட்டனர். அப்போது மீனவர்கள் கடந்த 2-ந்தேதி ஆறுகாட்டுத்துறையிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது வாக்கி- டாக்கி தவறி கடலில் விழுந்து விட்டதாகவும் இது குறித்து போலீஸ் நிலையம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இது குறித்து மீனவர்களிடம் வேதாரண்யம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story