டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 26 May 2019 7:18 PM GMT)

டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூருக்கு பாசனத்துக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேட்டூர் அணை திறக்கும் தேதியான ஜூன் 12-ந்தேதிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் ஏதாவது அதிசய நிகழ்வு நிகழ்ந்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகத்தில் தொடங்கும் அறிகுறிகள் இல்லாத நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடியை மறந்து விடவேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

விவசாய தொழிலாளர்கள் விவசாய பணிகளை விட்டு வேறு பணிகளுக்கு போக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். விவசாய பணிகள் இல்லாத நாட்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். காவிரி கரையோர விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். சில இடங்களில் இரண்டாம் களை எடுப்பு பணி நடைபெற்று வருகின்றன.

குறுவை சாகுபடி

இதே போல் நிலத்தடி நீரை கொண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய நாற்றங்கால் அமைக்கும் பணியிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணை திறந்து வாய்க்கால்களில் தண்ணீர் வந்தால் தான் குறுவை சாகுபடி செய்ய இயலும் என்ற நிலையில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களை தரிசாகவே போட்டுள்ளனர். இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மத்தியில் அமைய உள்ள அரசு காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தை கூட்டி கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழகததிற்கு தண்ணீர் தர வலியுறுத்தி தமிழக விவசாயிகளை வாழ வைக்க வழி செய்ய வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர மத்திய அரசு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து டெல்டா விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story