தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: 162 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பு


தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: 162 பயணிகள் மாற்று விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 27 May 2019 4:30 AM IST (Updated: 27 May 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மாற்று விமானத்தில் 162 பயணிகள் 9 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

செம்பட்டு,

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் மாலை 3 மணிக்கு திருச்சிக்கு வந்து பின்னர் மீண்டும் மாலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் திருச்சி வந்த அந்த விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல 173 பயணிகள் காத்து இருந்தனர். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே விமானம் இயக்கப்படாமல் விமானநிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 173 பயணிகளும் விமானநிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் போராடி நேற்று அதிகாலை 2 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. பின்னர் அந்த விமானம் 4 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு 162 பயணிகளும் சிங்கப்பூருக்கு 9 மணிநேரம் தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 11 பயணிகள் பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி சென்றனர். 

Next Story