உட்கோட்டை அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி


உட்கோட்டை அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி
x
தினத்தந்தி 27 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

உட்கோட்டையில் உள்ள அபராத ரட்சகர் கோவிலில் உழவார பணி நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் அருள்மிகு அபிராமி அம்பிகை உடனுறை அபராத ரட்சகர் கோவில் உள்ளது. இக்கோவிலானது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும். மேலும் உலகில் எங்கும் இல்லாத வகையில் 7 கைகளையுடைய துர்க்கை அம்மனை கொண்ட மிகப்பெரும் சிறப்பு வாய்ந்ததாகும். உலக பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று உழவார பணி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த உழவார பணியில் ராஜபாளையம் திருநாவுக்கரசர்மடம் கணேச சிவாச்சாரியார் தலைமையில், குரு குலத்தை சேர்ந்தவர்களான ராஜபாளையம், சென்னை, ஈரோடு உள்ளிட்ட குருகுலத்தில் பயிற்சி பெற்ற 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

சிலைகளின் மீது பூசி...

தொடர்ந்து அவர்கள் கோவிலை சுற்றி வளர்ந்திருந்த தேவையற்ற புற்கள், மரம், செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர் தொடர்ந்து கோவிலின் கருவறைகள் உள்ளிட்ட துர்க்கை அம்மன், விநாயகர், நந்தியம்பெருமான் சிலைகள் அனைத்தையும் அரிசி மாவு மற்றும் தயிர் கலந்து சிலைகளின் மீது பூசி சுத்தப்படுத்தினர். மேலும் பூஜை பொருட்கள், சுவாமி சிலைகளில் இருந்த அங்க வஸ்திரங்கள் உள்ளிட்ட துணிகளை துவைத்து தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு இறைபணி, ஆன்மா, மனசாட்சி, அறிவு பற்றி சிவாச்சாரியார் தலைமையில் போதிக்கப்பட்டு மேள தாளங்கள், சங்குகள் முழங்கப்பட்டு நாதஸ்வரங்கள் வாசிக்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து இறைவனின் புகழ் பாடப்பட்டு இறை நாமம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து துர்க்கை அம்மன் மற்றும் சாமிகளுக்கு மாலையில் மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் செய்திருந்தனர். 

Next Story