3-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வி பொருட்கள் வாங்க குழந்தைகள்-பெற்றோர் ஆர்வம்


3-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வி பொருட்கள் வாங்க குழந்தைகள்-பெற்றோர் ஆர்வம்
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-27T01:36:14+05:30)

வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி கல்வி பொருட்கள் வாங்க குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆர்வம் காட்டி வருவதால் பெரம்பலூர் கடைவீதியில் கூட்டம் அலைமோதுகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, டவுன் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகள் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளாகும். இந்த பகுதிகளில் ஜவுளிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, காலணி கடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பூக்கடைகள், பழக்கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இங்கு வந்து தான் வாங்கி செல்கின்றனர். இதனால் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட இந்த பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

புத்தக பை- சீருடை வாங்க...

இதையொட்டி தங்களது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, புத்தக பை, நோட்டுகள், பேனா, பென்சில் போன்ற கல்வி பொருட்கள் வாங்க விடுமுறை நாளான நேற்று பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிக் கடைகள், புத்தக பை விற்கும் கடைகள், பென்சில், பேனா போன்ற பொருட்கள் விற்கும் ஸ்டேஷனரி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அப்போது குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகள் பெட்டி, தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

கூட்டம் நிரம்பி வழிந்தது

மேலும் இந்த பகுதிகளில் தையல் கடைகளும் அதிகம் உள்ளன. ஏற்கனவே தங்களது குழந்தைகளுக்கு பள்ளி சீருடை எடுத்து தைக்க கொடுத்திருந்த பெற்றோர் அதனை வாங்க தையல் கடைகளில் அதிகளவு கூடினர். மொத்தத்தில் இந்த பகுதிகளில் கல்வி பொருட்கள் வாங்க பெற்றோரும், அவர்களது குழந்தைகளும் அலைமோதி வருகின்றனர். மேலும் காலணிகள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

Next Story