மாணவரை அடித்து உதைத்ததாக புகார் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளிக்கு ‘சீல்’


மாணவரை அடித்து உதைத்ததாக புகார் நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளிக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 27 May 2019 4:45 AM IST (Updated: 27 May 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

மாணவரை அடித்து உதைத்ததாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து நாகர்கோவிலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிக்கு ‘சீல்‘ வைத்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியில் தனியாருக்கு சொந்தமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 22 மாணவர்கள் தங்கி, படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதலங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் உள்ள ஒரு மாணவரை அதன் நிர்வாகி ஒருவர் கம்பாலும், கையாலும் அடித்து உதைக்கும் காட்சி பரவியது. இந்த காட்சி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி குமுதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் ஆகியோருக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, சமூக வலைதளங்களில் பரவியது உண்மை சம்பவம் தான் என்பது தெரியவந்தது.

விசாரணையில், தாக்கப்பட்ட 21 வயதுடைய மாணவர், காப்பக வளாகத்தில் நடனமாடியதாகவும், இதனால், ஆத்திரமடைந்த காப்பக உரிமையாளர் தாக்கியதும் தெரியவந்தது. தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்று விட்டனர்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல், மதுசூதனபுரம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று காலை 6 மணிக்கு என்.ஜி.ஓ. காலனியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் சிறப்பு பள்ளிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் அந்த பள்ளியில் உள்ள அனைத்து அறைகளுக்கும் ‘சீல்‘ வைத்தனர். அப்போது, சுசீந்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story