கார் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த டிரைவர் சாவு
கம்பத்தில் கார் மோதி மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கம்பம்,
கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 63). கார் டிரைவராக உள்ளார் இவர் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் கேரளாவிற்கு சென்று விட்டு கம்பம் நோக்கி வந்தார் கம்பம் யானைக்குழாய் அருகே வந்துகொண்டிருந்தபோது பின்னால் வந்த கேரள பதிவெண் கொண்ட கார் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமன் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். கார் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்து கிடந்த ராமனை மீட்டு கம்பம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடி வருகின்றனர்.