ஈரோட்டில் பரபரப்பு ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


ஈரோட்டில் பரபரப்பு ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 28 May 2019 12:27 AM IST (Updated: 28 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட எல்லையான மகுடஞ்சாவடிக்கும், மாவிலிபாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓடும் ரெயிலில் அடுத்தடுத்து 2 நாட்கள் பெண்களிடம் சுமார் 30 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்துவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் இடையே பீதியை கிளப்பியது. இதில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை சம்பவம் நடந்த பிறகு ஈரோடு–சேலம் மார்க்கத்தில் செல்லும் ரெயிலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்திலேயே ஒருவர் நகையை பறித்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

ஓசூர் கே.பி.ஜி.நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி நிர்மலா (வயது 48). இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு தூத்துக்குடி–மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் சென்று கொண்டிருந்தனர். அந்த ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிஅளவில் ஈரோட்டுக்கு வந்தது. அதன்பின்னர் ரெயில் சேலம் நோக்கி புறப்பட்டது. அப்போது ஜன்னல் ஓரமாக நிர்மலா தூங்கி கொண்டு இருந்தார்.

நடைமேடையில் ரெயில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது நிர்மலாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா சத்தம் போட்டார். அதற்குள் ரெயில் வேகமாக சென்றது.

சேலம் ரெயில் நிலையத்துக்கு சென்ற பிறகு நிர்மலாவும், கணவர் ராமகிருஷ்ணனும் இறங்கினர். அவர்கள் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பின்னர் அந்த புகார் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story