கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கிகள் உடைப்பு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கிகள் உடைப்பு சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 May 2019 4:30 AM IST (Updated: 28 May 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

இலுப்பூர் அருகே கோவில் திருவிழாவில், ஒலிபெருக்கிகளை உடைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால், அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவர், புதுக்கோட்டைக்கு வந்து விட்டு நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர், கோவில் திருவிழாவில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் தகராறு செய்ததோடு, அங்கிருந்த ஒலிபெருக்கிகளை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த நவம்பட்டி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மரங்களை வெட்டிபோட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஒலிபெருக்கிகளை பறித்துச்சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வரவழைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் இலுப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் குரு ராஜமன்னார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நவம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த இலுப்பூர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story