குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பமானார் நிவாரண உதவி கேட்டு கலெக்டரிடம் மனு


குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பமானார் நிவாரண உதவி கேட்டு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 28 May 2019 4:30 AM IST (Updated: 28 May 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின், மீண்டும் கர்ப்பமான பெண் நிவாரண உதவி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்கள். நாடாளுமன்ற தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கை முடிந்து கடந்த 23-ந்தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2½ மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆனால் பொதுமக்கள் அதிக அளவில் வராததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

மணப்பாறை அருகே உள்ள அழககவுண்டம்பட்டியை சேர்ந்த தச்சு தொழிலாளி செல்வராஜ் என்பவரது மனைவி சிட்டம்மாள் (வயது25). 8 மாத கர்ப்பிணியான இவர் நேற்று கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘எனக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். இரண்டாவது மகன் பிறந்ததும் கடந்த 2014-ம் ஆண்டு புத்தாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால், நான் இப்போது மீண்டும் கர்ப்பம் அடைந்து உள்ளேன். 3 குழந்தைகளை என்னால் வளர்க்க சிரமமாக இருக்கும் என்பதால் எனக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும். மேலும் எனக்கு சரியான முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

திருச்சியில் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் 19 வயது பெண் ஒருவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நான் ஜெயலட்சுமி என்ற பெண்ணிடம் வியாபாரத்திற்காக ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தேன். கடனுக்கு கட்டவேண்டிய ஒரு மாத வட்டியை கட்டாததால் அந்த பெண்ணும் அவரது மகளும் என்னை விபசாரத்தில் தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம பகுதிகளில் இருந்து வரும் எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு உதவும் வகையில் மனு எழுதி தருதல் போன்ற சேவை செய்ய தங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி மனு கொடுத்தனர். ஆனால் இதற்கு கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. 

Next Story