சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகளும் ஏமாற்றம் அளிப்பதால் பொதுமக்கள் தவிப்பு


சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: ஆழ்துளை கிணறுகளும் ஏமாற்றம் அளிப்பதால் பொதுமக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 28 May 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் ஆறுதல் அளித்து வந்த ஆழ்துளை கிணறுகளும் ஏமாற்றம் அளிப்பதால் பொதுமக்கள் தவிப்படைந்து உள்ளனர். தலைநகரின் சாபம் எப்போது தீருமோ? என்று ஏக்கத்தில் உள்ளனர்.

சென்னை,

கோடைக்காலம் என்றாலே கொளுத்தி எடுக்கும் வெயிலும், விசுவரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் சென்னை நகரின் தலைவிதி என்றாகி விட்டது. பருவமழை ஏமாற்றியதால் ஏரிகள் வறண்டு போனது. கல் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை எடுக்கும் நிலையும் அமைந்துபோனது. விவசாய கிணறுகளில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு போதிய நீர் வழங்கமுடியாத சூழல் உருவாகியுள்ளதை தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருவாரியான பகுதிகளில் வீட்டு குழாய்களும், அடிபம்பு குழாய்களும் வலுக்கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால், தற்போதைய நிலையில் தண்ணீர் லாரிகள் மட்டுமே மக்களுக்கு கைகொடுத்து வருகின்றன.

கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டிலும் ஓரளவு ஆறுதலாக அமைந்திருக்கும் ஆழ்துளை கிணறுகளும் தற்போது மக்களை வஞ்சிக்க தொடங்கிவிட்டன. கத்திரி வெயில் தொடங்கிய காலத்தில் இருந்தே வீடுகளில் போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகளில் (போர்வெல்) வழக்கமாக வரும் நீரின் அளவு குறைய தொடங்கியது. தற்போது நீரின் அளவு வெகுவாக குறைந்த நூலிழை அளவிலேயே தண்ணீர் வர தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக 2000-ம் ஆண்டுக்கு முன்பாக நிலத்தடி நீர்மட்டத்தை கணக்கிட்டு அதிகபட்சமாக 150 அடி வரையிலேயே ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. இந்தநிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததின் எதிரொலியாக இந்த ஆழ்துளை கிணறுகள் தற்போது கையை விரித்துவிட்டன.

அதேவேளையில் 2000-ம் ஆண்டுக்கு பின்னர் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் 300 அடி கொண்டவை. அதுவும் கடந்த சில வருடங்களாக சென்னையில் 400 அடி வரை ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த ஆழ்துளை கிணறுகளும் அணைய இருக்கும் விளக்காக மாறி வருகின்றன. குழாய்களில் இருந்து விழும் நீரும் இன்று நிறுத்தப்படுமோ, நாளை நிறுத்தப்படுமோ? என்ற அச்சத்தை தருகிறது. அந்தளவு மிக குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது. இப்படி சென்னை மக்களை ஆழ்துளை கிணறுகளும் ஏமாற்ற தொடங்கி விட்டன.

பல இடங்களில் அடி ‘பம்பு’களில் வரும் தண்ணீரும் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால் பொதுமக்கள் தவித்து போய்விடுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் கூட தண்ணீர் லாரிகளுக்கு முன்பதிவு செய்து, காசு கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஏழை மக்கள் தெரு தெருவாக குழாயடி நோக்கி பயணம் செய்கின்றனர்.

சென்னை மக்களுக்கு தண்ணீர் தேவையை சரிசெய்ய தற்போது பெரிதும் கைகொடுப்பது தண்ணீர் லாரிகள் தான். இரவோ, பகலோ எப்போது தண்ணீர் லாரிகள் வந்தாலும் அதை சூழ்ந்து தண்ணீரை பிடிப்பதில் மக்கள் படாதபாடு பட்டு விடுகிறார்கள். வேலைசெய்து களைத்து வரும் கணவன்மார்களை வரவேற்க மனைவிமார்கள் வாசலில் நிற்கிறார்களோ இல்லையோ, தற்போதைய சூழ்நிலையில் காலி குடங்களுடன் வீட்டு வாசலிலேயே தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்து கிடக்கின்றனர்.

‘எந்தெந்த ஊரில் எல்லோமோ மழை பெய்யுது... இந்த சென்னை அப்படி என்னதான் பாவம் பண்ணுச்சுனு தெரியல... மழையே பெய்ய மாட்டுதே...’, என்று மக்கள் ஆத்திரத்தில் குமுறுவதை பார்க்கமுடிகிறது. தலைநகருக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் பிரச்சினை எனும் சாபம் தீராதா? எனும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


Next Story